|
சீகாழி
தலம்:
சோழவள நாட்டில் காவிரி வடகரையில்
அமைந்துள்ள 14 ஆவது தலம். நாகை மாவட்டத்தில் சீகாழி கோட்டத்தின் தலைநகர்.
மயிலாடுதுறை - சிதம்பரம் இருப்புப்பாதையில் இரயில் நிலையம், பேருந்து வசதிகள் உள்ள
பெரிய ஊர்.
பிரமபுரம், வேணுபுரம், புகலி,
வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், புறவம், சண்பை, காளிபுரம், கொச்சைவயம், கழுமலம்,
சிரபுரம் என்ற பன்னிரண்டு திருநாமங்களையுடையது. இவற்றின் பெயர்க்காரணங்களைப் பதிகம்
அறுபத்து மூன்றில் திருஞானசம்பந்த சுவாமிகளே எடுத்து விளக்கியுள்ளார்கள். அது
`பல்பெயர்ப்பத்து' என அமைக்கப்பெற்றுள்ளது. திருக்கழுமல மும்மணிக்கோவையுள்
`வசை யில் காட்சி' என்னும் செய்யுளில் இப்பன்னிரண்டு பெயர்களும் பன்னிருயுகத்தில்
வழங்கினவாகப் பட்டினத்தடிகளால் உணர்த்தப் பெறுகின்றது. இவையன்றி, சங்கநிதிபுரம்
முதலாகப் பதினான்கு பெயர்களும் உள்ளனவாகத் தலபுராணம் சொல்லும்.
விசேடங்கள்:
புறவாழிக் கடல் பொங்கி எழுந்த
பேரூழிக்காலத்தில் இறை வன் அறுபத்துநான்கு கலைகளையும் ஆடையாக உடுத்துப் பிரணவத்
தோணியில் அம்மையப்பனாக எழுந்தருளி வரும்போது ஊழியிலும் அழியாத இத்தலத்தைக்கண்டு
இதுவே மூலமென்றெண்ணித் தங்கினர்.
இங்கே ஒரு மலை உண்டு. இது இறைவன் ரோமச
முனிவருக் காகத் திருக்கயிலைச் சிகரமொன்றைத் தென்திசையில் தோற்றுவித்து, தானும்
அம்மையுமாக இருந்து காட்சி வழங்கும் இடம். இதனை `இருபது பறவைகள்
ஏந்திக்கொண்டிருக்கின்றன'. இங்கே குரு, லிங்க, சங்கமமாகிய மூன்று திருமேனியையும்
வழிபடலாம். குருமூர்த்தம் தோணியப்பர்; இலிங்க மூர்த்தம் பிரமபுரீசர்;
சங்கமமூர்த்தம் சட்டை நாதர். இதுவே திருஞானசம்பந்தப்பெருமான் அவதாரஸ்தலம்.
சுவாமிகளின் பெயர்கள்:
சுவாமி பிரமபுரீசுவரர்; அம்மை
திருநிலைநாயகி. சுவாமி அம்மன் கோயில்களுக்கிடையில் ஞானசம்பந்தர் ஆலயம் இருப்பது
சோமாஸ்கந்தர் நிலையை நினைவூட்டுவது. திருத்தோணிச் சிகரத் துள்ள இறைவர் பெரியநாயகர்;
தோணியப்பர் எனவும் வழங்கப் பெறுவர். இறைவி பெரியநாயகி; திருஞானசம்பந்தப்
பெருமானுக்குச் சிவஞானப்பால் அளித்தவர் இவரே.
தீர்த்தங்கள்:
பிரமதீர்த்தம், காளிதீர்த்தம்,
கழுமலநதி, விநாயகநதி, புறவ நதி முதலிய இருபத்திரண்டு தீர்த்தங்கள் உள்ளன.
வழிபட்டோர்:
முருகன், காளி,பிரமன், இந்திரன்
முதலியோர். ஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்து அடிகள்,
நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார், அருணகிரிநாதர் முதலியோர் போற்றியுள்ளனர்.
கணநாதநாயனார் அவதரித்த தலம். திருக்கயிலாய பரம்பரையில் வந்தருளிய அருள்நமச்சிவாயர்,
கங்கைமெய்கண்டார் சிற்றம்பலநாடிகள் முதலியோர் வாழ்ந்த தலம்.
விழாக்கள்:
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்
அர்த்தயாமத்தில் ஷ்ரீ சட்டைநாதருக்கு விசேஷ வழிபாடு நடைபெறும். சித்திரைமாதம்
இறைவன் இறைவியர்க்குப் பெருவிழா நடைபெறும். அதில் இரண் டாந்திருநாள்
திருஞானசம்பந்தருக்கு உமையம்மை அளித்தருளிய திருமுலைப்பால் திருவிழா.
இவ்விழாக்களிற் பெரும்பாலன திருஞானசம்பந்தர் ஐதீகத்தை ஒட்டியனவேயாம்.
கல்வெட்டு:
இத்தலத்துக்கு நாற்பத்தேழு
கல்வெட்டுகள் உள்ளன. இரண்டாங்குலோத்துங்கன் கல்வெட்டுமுதல் வேங்கட தேவராயர்
கல்வெட்டுவரையில் பதின்மூன்றுக்கு மேற்பட்ட அரசர் பெருமக்க ளுடையனவாகக்
காணப்படுகின்றன.
இக்கல்வெட்டுக்களால், இத்தலம்
இராஜராஜவளநாட்டுத் திருக்கழுமலநாட்டுப் பிரமதேயம் திருக்கழுமலம் என்று பிரிவும்
பெயரும் குறிக்கப்பெறுகின்றது. பிரமபுரீசுவரர் திருக்கழுமலமுடை யார்,
திருக்கழுமலமுடைய நாயனார் என்றும், தோணியப்பரும் அம்மையும் திருத்தோணிபுரமுடையார்,
பெரிய நாச்சியார் என்றும், சம்பந்தப் பெருமான் ஆளுடையபிள்ளையார் என்றும்
குறிக்கப்பெறு கின் றார்கள்.
ஆளுடையபிள்ளையார் கோயிலில்
ஆளுடையபிள்ளையார் வடிவத்தை எழுந்தருளச்செய்தவள் மூன்றாங்குலோத்துங்கனுடைய
அடுக்களைப் பெண்டுகளிலே மூத்தவள் இராஜவிச்சாதரி என்பாள் என்பது
குறிக்கப்பெற்றுள்ளது. இரண்டாம் இராஜராஜனது கல்வெட்டு, கங்கைகொண்டசோழ
புரத்தானொருவன் ஆளுடையபிள்ளையார் திருக்கோயில் முதற் பிராகாரம் திருமதில் எடுக்கப்
பொன் கொடுத்தான் என்கின்றது. கல்வெட்டொன்றில் திருநட்டப்பெருமான் ஆளுடைய பிள்ளையார்
என வருவது சுட்டுவிரல் நீட்டிக் கூத்தாடுகின்ற குழந் தையாகிய ஞானசம்பந்தரைக்
குறிப்பதாகலாம். பொத்தப்பிச் சோழன் என்பவன் வீரபாண்டியனை வென்று வெற்றிப்பரிசாக
அங்கிருந்து நடராஜப்பெருமானைக் கொண்டுவந்து சீகாழியில் கொடுத்தான் எனத் தெரிகிறது.
இங்கு, பொன்கொடுத்தும், நிலம்விட்டும் போற்றிய அரசர் கள் வீரராஜேந்திரன்,
குலோத்துங்கன் II, இராஜராஜன்II, இராஜாதிராஜன்II, குலோத்துங்கன்III, இராஜராஜன்III,
கோப்பெருஞ்சிங்கன்III, வீரவிருப்பணமுடையான், வேங்கட தேவராயர், இராமப்ப நாயக்கன்,
ஆறனூர் இணைச்சியப்ப அகரவல்ல வன், விட்டலதேவன் முதலியோராவர்.
இத்தலம் தருமை ஆதீனத்தின்
அருளாட்சியில உள்ள திருக் கோயில்களில் ஒன்றாகும்
நன்றி
|