Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Contact

 

 

 
  Users online ::

 

     யாழ்/நாகர்கோவில் கிராமத்து மக்கள் கல்விக்கடலில் மூழ்கி அறிவென்ற முத்துக்களை அள்ளி எடுப்பதற்க்காக எமது கிராமத்து பெரியார்களால் தனியாக அமைக்கப்பட்ட கல்விக்கூடமாகிய  நாகேஸ்வரா வித்தியாலயம். பின்னர் அப்பாடசாலை அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெறப்பட்டு யாழ்/நாகர்கோவில் மகாவித்தியாலயம் எனப்பெயர் பெறப்பட்ட கல்விக்கூடத்தின் வரலாறும், அதற்க்காக பாடுபட்ட பெரியார்கள், நன்கொடையளித்தவர்களின் விபரங்களுடன் இவ் வரலாற்றுச்சுருக்கத்தினை இக்கிராமவாசியாகிய திருமதி பாலசுப்பிரமணியம் சரஸ்வதி ஆகிய இவர் எமது இணையத்தளத்திற்கு (இலங்கையில் இருந்து) எழுதியனுப்பியுள்ளார். இவருக்கு இவ் இணையம் மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துகொண்டு அவ்வரலாற்றை இணைத்துக்கொள்கிறோம்.

பூர்வீக நாகதம்பிரான் வந்துறைந்த பதியாகிய நாகர்கோவில் கிராமம் சுமார் 4 கிலோமீற்றர் நீளமும், 3 கிலோமீற்றர் அகலமும் உடையது. பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் அமைந்த இடம் நாகர்கோவில் தெற்கு என்றும், அங்கிருந்து வடக்கே சுமார் 1கிலோமீற்றர் தொலைவில் முருகன் ஆலயமும், அங்கிருந்து வடக்கே சுமார் 500 மீற்றர் தொலைவில் சவேரியார் கத்தோலிக்க தேவாலயமும், அங்கிருந்து வடக்கே சுமார் 500 மீற்றர் தொலைவில் கெளவுத்தந்துறை விநாயகர் ஆலயமும் உள்ளது இவ் மூன்று தெய்வங்களையும் நம்பியே இக்கிராம மக்கள் வாழ்ந்துவந்தார்கள். ஆனால் பாடசாலைகள் எதுவுமில்லை. அப்படி இருந்தும் இக்கிராம மக்கள் மிகவும் புத்திசுபாவம் உடயவர்களாகவே வாழ்ந்தார்கள். "150 ஆண்டுகளுக்கு முன்னர்".

அந்தசந்தர்ப்பத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்னர் நாகர்கோவில் தெற்கில் வசிக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசனைசெய்து அவர்களால் ஒரு பொது இடமொன்றினை தெரிவு செய்துகொண்டு அக்காணியில் தங்கள் செலவிலேயே ஒரு கல்விக்கூடம் அமைத்து ஒருசில ஆசிரியர்கள் ஊதியம் எதிர்பாராமல் 6ம் ஆண்டுவரை கல்வி கற்ப்பித்தார்கள். அக்கல்விக்கூடத்திற்கு அமெரிக்கன்மிஷன் என்று பெயர் சூட்டப்பட்டது. அதன் பின்னர் நாகர்கோவில் வடக்கில் சவேரியார் தேவலய மதகுருவினால் அத்தேவலயத்தின் வளாகத்தில் பின்புறமாக கத்தோலிக்க பாடசாலை ஒன்று நிறுவப்பட்டது. அக்கத்தோலிக்க பாடசாலையில் ஒரு ஆசிரியரை நியமித்து 5ஆம் ஆண்டுவரை இக்கிராம மக்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டது என அறியக்கூடியதாக உள்ளது. இப்படி இக்கிரமத்தில் கல்வி வளர்ச்சி ஆரம்பமாக்கப்பட்டுள்ளது. இக்கிராம மக்கள் 5ஆம் ஆண்டு, 6ஆம் ஆண்டு படிப்பினை முடித்ததும் இக்கிராமக்கள் படிப்பு முடிந்தது என தத்தமது வேலைகளை செய்துவந்தார்கள். இதனால் நாகர்கோவில் தெற்கில் வாழும் மக்களில் சிலர் அயல்கிராமங்கள் சென்று படிப்பினைத்தொடர்ந்ததன் பயனாக அரச வேலைகளும் கிடைத்துள்ளன. பின்னர் நாகர்கோவில் தெற்கில் கிராமசேவகர் நிலையம்,  தபால் நிலையம், தபால் நிலைய வளர்ச்சியின் பயனாக தந்திச்சேவையும் அத்தோடு 3மைல் தூரத்திற்கு பேரூந்து வருவதற்க்கான வீதியொன்றினையும் அமைத்தார்கள்.

பின்னர் 1954ஆம் ஆண்டு அயல் கிராமமான பருத்தித்துறையில் வசித்துவந்த வேலுப்பிள்ளையின் மகனாகிய நாகநாதன் என்னும் பெரியார் இக்கிராம பூர்வீக நாகதம்பிரானை வேண்டி இக்கிராமத்தில் ஒரு இந்து பாடசாலை ஒன்றினை உருவாக்க விரும்பினார். ஆகவே வேலுப்பிள்ளை நாகநாதன் இக்கிராம மக்களிடையே ஒருகாணி தரும்படி கேட்டபோது அக்கிராமத்தில் மிகவும் அக்கறையுடையவராகிய பெரியார் சின்னத்தம்பி ஆறுமுகம் என்பவர் தமக்கு சொந்தமான எல்லையில் 1ஏக்கர் நிலத்தினை இக்கிராம மக்களின் வளர்ச்சிக்கென நன்கொடையாக கொடுத்துதவினார். அதன் பின்னர் திரு நாகநாதன் என்பவரால் இரண்டு ஆண்டுகளுக்குள் 50அடி நீளமுடைய கட்டிடமொன்றினை உருவாக்கினார்.

1956ஆம் ஆண்டு திரு நாகநாதன அவரால் உருவாக்கப்பட்ட இப்பாடசாலைக்கு நாகேஸ்வரா வித்தியாலயம் என பெயர் சூட்டப்பட்டு பெரும் விமரிசையாக திறந்துவைத்து 6ஆசிரியர்களையும் வேலையில் அமர்த்தி ஒருவருட காலமாக திரு நாகநாதன் இவரே அவ் ஆசிரியர்களுக்கு ஊதியத்தினையும் வழங்கிவந்தார். பின்னர் அவ் மாணவர்களின் பெற்றோர்கள் பங்களிப்பினால் சிறிய ஊதியங்களுடன் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்ப்பித்தார்கள். அதன் பின்னர் 1958ஆம் ஆண்டு இப்பாடசாலை அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெறப்பட்டது. பின்னர் 1959ஆம் ஆண்டு மார்கழிமாதம் வகுப்பேற்றுப் ப்ரீட்சையும் நடந்தது. அதைத்தொடர்ந்து பிள்ளைகள் அடுத்த உயர் நிலைப் படிப்புக்களை அயல் கிராமமாகிய பருத்தித்துறையில் படித்துவந்தார்கள்.

பின்னர் இப்பாடசாலயில் கல்விகற்க்கும் மாணவர்களுக்கு விளையாட்டுக்கள் நடார்த்துவதற்க்காக. மைதானம் அமைப்பதற்கு காணி தேவைப்பட்டன. இதனை அறிந்துகொண்ட இக்கிராம வாசியான பெரியயர் திரு கணபதிப்பிள்ளை செல்லப்பா ஆகிய இவர் தமக்கு சொந்தமான காணி பாடசாலைக்கு அருகே உள்ளது அக்காணியில் 1ஏக்கரை  இக்கிராம வளர்ச்சிக்காக நன்கொடையாக கொடுத்துதவினார். பின்னர் 1961ஆம் ஆண்டு நாகேஸ்வராவித்தியாலயம் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டது அதன் பயனாக இப்பாடசாலை மகாவித்தியாலயமாக மாற்றப்பட்டது. அப்போது O/L படிக்கும் மாணவர்கள் தொகை மிகவும் குறைவாக உள்ளதால் A/L படிப்பினை நடார்த்துவதற்கு கல்வி அமைச்சரால் அனுமதி வழங்கப்படவில்லை.

காலப்போக்கில் இக்கிராமத்தில் திரு நாகநாதன் என்பவரால் உருவாக்கப்பட்ட நாகேஸ்வரா மகாவித்தியாலயம் இக்கிராம மக்களின் அனுசரணையுடன் வளர்ந்துகொண்டேவந்தது. மீண்டும் ஒரு கட்டிடம் ஒன்றினை அமைத்து. பழையமாணவர்களின் உதவியுடன் பாடசாலை வழாகத்தைச்சுற்றி வேலியும் அமைக்கப்பட்டது. அதேவேளையில் மாணவர்கள் தொகையும் அதிகரித்தது. ஆசிரியர்களும் கூடுதலாக கடமையாற்றினார்கள். இக்கடமையாற்றும் ஆசிரியர்கள் பருத்தித்துறை, நெல்லியடி, அம்பன், கரவெட்டி போன்ற நகரங்களில் இருந்து ஆசிரியர்கள் வந்தார்கள். இக்காலப்பகுதியில் அதிபராக திரு பரமகுரு அவர் இப்பாடசாலை பொறுப்பினை ஏற்றுவந்தார். திரு பரமகுரு இவரும் பருத்தித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவர். இப்படியே இப்பாடசாலையானது தொடர்ந்து வளர்ந்துகொண்டே வந்தவேளையில் இக்கிராம மக்கள் கல்வியினை முறையாக கற்றுக்கொண்டு அரசவேலைகள் ஊளியர்களாக கடமையாற்றினார்கள்.

பின்னர் 1991ஆம் ஆண்டு பலபல கிராம மக்கள்.( மயிலிட்டி, செம்மலை, திருகோணமலை, கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, ஆழியவளை, உடுத்துறை, மருதங்கேர்ணி ஆகிய கிராம மக்கள்.) போராட்ட சூழல் காரணமாக தத்தமது வசிப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து நாகர்கோவில் ஆகிய இக்கிராமத்தை வந்தடைந்தார்கள். அம்மக்கள் இக்கிராமத்தில் குடிசைகளை அமைத்து தங்களது பிள்ளைகளை நாகேஸ்வரா மகாவித்தியாலயத்திலும், அமெரிக்கன் மிஷன் பாடசாலையிலும் கல்விகற்பதற்காக அனுப்பி பிள்ளைகள் நன்றாக தங்களது கல்வியினை தொடர்ந்து கற்றுக்கொண்டார்கள். அதன்பின்னர் இக்கிராம மக்களினால். மீண்டும் ஒருகட்டிடம் உருவாக்கப்பட்டு 3கட்டிடங்களுக்கும் பெயர் சூட்டப்பட்டன. அப்பெயர்கள் யாதெனின்? இக்கிராமத்தில் விடுதலை போராட்டத்திற்காக தங்களது இன்னுயிர்களை தியாகம் செய்துகொண்ட மாவீரர்களாகிய கப்டன்:: வீமன்,  லெப்டினன்:: பேணாட,  வீரவேங்கை:: குட்டிபேணாட்,  வீரவேங்கை:: நிறஞ்சன ஆகிய மாவீரர்களை நினைவுகொள்ளும் வண்ணமாக இப்பாடசாலைக் கட்டிடங்களுக்கு இவர்களது பெயர்கள் சூட்டப்பட்டன.

1991ஆம் ஆண்டு இப்பாடசாலைக்கு அதிபராக கடமையாற்றிக்கொண்ட திரு பரமகுர ஆகிய இவருக்கு உதவி அதிபராக கரவெட்டியை பிறப்பிடமாகக்கொண்ட திரு மகேந்திரம் மாஸ்டர் அவர் இப்பணியினை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். சுமார் ஒருவருட காலத்திற்கு பின்னர் இவரே நாகேஸ்வரா மகாவித்தியாலயத்திற்கு பிரதான அதிபராக நியமனம் பெற்றுக்கொண்டார். திரு மகேந்திரம் பதவி ஏற்ற காலத்தில் அவரால் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன அவற்றுள் சிறப்பான அம்சம் மாணவர்களுக்கு கழுத்துப்பட்டியினை தயார் செய்துகொடுத்து மாணவர்களை அழகுபடுத்திப்பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டதுடன், கிராம மக்களின் மனதில் தனிமதிப்பினை பெற்றுக்கொண்டார். இவ் அதிபராகிய திரு மகேந்திரம் மாணவர்களுடன் சகதோழர்களாகவும், இக்கிராம மக்களுடன் தாமும் இக்கிராமத்தவர்போலவும் பழகிக்கொண்டார். இதன்பயனாக இவருக்கு இக்கிராம மக்கள் பெரும் நன்றியினைக் கூறக்கடமைப்பட்டுள்ளனர். ஆனால்.........! இவருக்கு என்றும் நீங்காத வேதனதமது சொந்த பிள்ளைகள் போல் பராமரித்து வந்த இப்பாடசாலைப் பிள்ளைகள் புக்காராகுண்டுவீச்சினால் கொல்லப்பட்ட கொடூர காட்சியினால் இவரர் ஈரவிழியுடன் இடிவிழுந்த மனபாரத்தோடு  இப்பாடசாலை இறுதிக்காலம்வரை இவரே அதிபராக இருந்து மிகவும் சிறப்பாக நடாத்திவந்தார்.

1995ஆம் ஆண்டு புரட்டாதிமாதம் 22ஆம் திகதி இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான புக்காரா என்னும் குண்டுவீச்சு விமானம் நடாத்திய குண்டுத்தாக்குதலில் 20 மாணவர்கள் உட்பட காத்தலிங்கம் நாதன், உடுத்துறை கிராமத்தைச்சேர்ந்த துரை எனபவரும் கொல்லப்பட்டதுடன் பலமாணவர்கள், கிராமவாசிகளும் படுகாயமடைந்தும் சிறுகாயங்களுக்குள்ளாகியும் பாதிக்ப்பட்டனர். அதன் பின்னர் பலபல இன்னல்களுக்கு மத்தியில் நடாத்திவந்த இப்பாடசாலை 1999ஆம் ஆண்டு பங்குனிமாதம் இனப்பிரச்சினைகாரணமாக இக்கிராம மக்கள் ஒட்டு மொத்தமாக இடம்பெயர்ந்து ஆங்காங்கே பரவிவாழ்ந்து வருகின்றார்கள். தற்ப்பொழுது இக்கிராமம் இலங்கை இராணுவத்தின் உயர்வலய இராணுவத்தளமாக அமைத்துள்ளார்கள்.

நன்றி

 

   

www.nakarmanal.com